இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? - கமல்ஹாசன் கேள்வி
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாருக்காக என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
டெல்லியில் புதிதாக அமைய உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.971 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணி 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் கொரோனா பேரிடர் காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்ட முயற்சி செய்வது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், மக்களைக் காக்க சீனப்பெருஞ்சுவர் கட்டப்படுவதாக மன்னர்கள் கூறினார்கள், ஆனால் அதை கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், யாரைக் காப்பதற்காக ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டப்படுகிறது என்பது குறித்து மாண்புமிகு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?
— Kamal Haasan (@ikamalhaasan) December 13, 2020
(1/2)