கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காத அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை கோரும் வழக்கிற்கு பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஆளுங்கட்சி முதல்–அமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரும் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.;

Update: 2020-12-11 12:41 GMT

சென்னை

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும், முக கவசம் அணிய வேண்டும். தனி மனித விலகலை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.

இந்தநிலையில், கடந்த அக்டோபர் 7–ந்தேதி அ.தி.மு.க., கட்சியின் முதல்–அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து, ஜெயலலிதாவின் சமாதியில் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட அமைச்சர்கள் உள்பட ஆளும் கட்சியினர் ஒருவர் கூட தனிமனித விலகலை கடைப்பிடிக்கவில்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசை நடத்தும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு, கட்சியினரை ஒன்று கூட அனுமதித்தனர்.

பிறருக்கு முன் உதாரணமாக திகழ வேண்டிய அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆளும் கட்சியினரின் நிகழ்ச்சிகளில், அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டது. இதுகுறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

பதில் அளிக்க வேண்டும்

அதற்கு நீதிபதிகள், ‘‘மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களில் இருந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்திருந்தாலும், தனி மனித விலகல் பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது’’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், வருகிற ஜனவரி 6–ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதார துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி சுகாதார அதிகாரி, பேரிடர் மேலாண்மை மைய தலைவர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

 

மேலும் செய்திகள்