ரஜினிகாந்த் பெங்களூரு பயணம்: முக்கியஸ்தர்களுடன் அரசியல் ஆலோசனை?

ரஜினிகாந்த் பெங்களூருவில் முக்கியஸ்தர்களுடன் அரசியல் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-12-07 02:59 GMT
பெங்களூரு,

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினார். இந்த மாதம் கட்சி பெயரை அறிவிக்கிறார். தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார வியூகம், வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்கள் குறித்த ஆலோசனைகள் போன்றவற்றில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

கட்சி பெயர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தேசிய கட்சிகள் பெயரை சார்ந்து இருக்குமா அல்லது திராவிட கட்சிகள் பெயர்கள் சாயலில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆன்மிக அரசியல் என்று அவர் தெளிவுபடுத்தி உள்ளதால் அதை பிரதிபலிக்கும் வகையில் கட்சியின் பெயரும், கொடியின் தோற்றமும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரஜினியின் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் நிலவுகிறது. சில சிறிய கட்சிகள் ரஜினியுடன் கைகோர்க்க ஆர்வம் காட்டுகின்றன என்றும், விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரலாம் என்றும் தெரிகிறது.

வேட்பாளர் தேர்விலும் தனித்துவம் காட்ட ரஜினி திட்டமிட்டு உள்ளார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டோருக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அவர்களை ரஜினி ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் பரபரப்புக்கு இடையில் ரஜினிகாந்த் நேற்று காலை திடீரென்று பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். கொரோனா ஊரடங்கில் போயஸ் கார்டனிலும், கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலும் மாறி மாறி வசித்த அவர் 9 மாதங்களுக்கு பிறகு முதல் தடவையாக வெளியூர் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். பெங்களூருவில் முக்கியஸ்தர்களுடன் அரசியல் ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.

வருகிற 12-ந் தேதி ரஜினியின் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். பிறந்த நாளில் ரஜினிகாந்த் வீட்டில் இருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அரசியல் பிரவேசத்துக்கு முன்பாக அண்ணாத்த படப்பிடிப்பை முடிக்கவும் படக்குழுவினரை அறிவுறுத்தி உள்ளார்.

வருகிற 15-ந் தேதி ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். அதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடிக்க இருக்கிறார்.

மேலும் செய்திகள்