கடலூரில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சர் நியமனம் - முதலமைச்சர் உத்தரவு

கடலூரில் நிவாரணை பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சரை நியமனம் செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-12-06 10:03 GMT
சென்னை,

தமிழக அரசு தலைமை செயலகத்தில் நேற்று புரெவி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் புயல் பாதிப்பால் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் புயல் மற்றும் கனமழை காரணமாக கால்நடைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இதனையடுத்து புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி பல்வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பின்வருமாறு;-

* சென்னை - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் நியமனம்

* கடலூர் - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

* திருவாரூர் - உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

* நாகப்பட்டினம் - நகராட்சி நிர்வாதத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

* செங்கல்பட்டு, காஞ்சிபுரம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் புயல் சேதம் அதிகம் இருப்பதால் கூடுதல் அமைச்சர் நியமிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சர் சி.வி.சண்முகம் நியமிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்