டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் - தினேஷ் குண்டுராவ் பேட்டி
டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என்று தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல்காந்தி பஞ்சாப், அரியானா மாநிலங்களில் போராட்டத்தை தொடங்கினார். இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டத்தை எதிர்த்து தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், சிவசேனா உள்பட எதிர்க்கட்சிகள் போராடியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது.
விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்காமல் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியபோது மத்திய அரசு காது கொடுத்து கேட்கவில்லை. இப்போது டெல்லியை விவசாயிகள் சுற்றி வளைத்து உள்ளனர். டெல்லிக்கு செல்லும் 4 முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதால் சரக்குகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். உடனடியாக அவர்களுடன் பேச வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காத வரை போராட்டம் ஓயாது.காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டது. அதை தீவிரப்படுத்துவது குறித்து கட்சியினருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும். காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்து பின்னர் பேசலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.