பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-12-01 11:10 GMT
சென்னை,

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்தியவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

இதனையடுத்து அரியர் தேர்வுகளை ரத்து செய்யும் உத்தரவை எதிர்த்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவில், தேர்வுகளை ரத்து செய்வதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல்கலைக்கழக மாணியக் குழுவும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும், ‘அரியர் தேர்வு ரத்து என்பது விதிமுறைகளுக்கு முரணானது’ என்று தெரிவித்தது. 

அதிலும் குறிப்பாக பல்கலைக்கழக மாணியக் குழு வெளியிட்ட அறிக்கயில், அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ராம்குமார் ஆதித்தன் சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போதே சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, விதிமுறைகளை மீறி பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இதற்கிடையில் காணொலி வாயிலாக நடந்த நீதிமன்ற விசாரணையின் போது சென்ற முறை அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டதால் விசாரணை தடைபட்டதாகவும், மேலும் மாணவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் வழக்கு விசாரணையை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அரியர் தேர்வு வழக்கு விசாரணை இனி நேரடியாக மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்