சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கான விமானங்களை இயக்க வேண்டும் - பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கான விமானங்களை இயக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.;

Update: 2020-11-16 22:45 GMT
சென்னை, 

ஹஜ் புனித யாத்திரைக்கு சென்னையில் இருந்து ஜெட்டாவுக்கு நேரடியாக விமானங்களை இயக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று எழுதிய கடிதத்தில், “ ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து 4,500-க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித யாத்திரை சென்று வந்தார்கள்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் உள்ள ஹஜ் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் 1987-ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஜெட்டாவுக்கு நேரடி விமானங்கள் சென்று கொண்டிருந்தன. இப்போது இந்திய ஹஜ் கமிட்டி ஒரு தகவலை அனுப்பியுள்ளது. அதில் கொரோனா பரவலையொட்டி இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து விமானங்கள் புறப்படும் இடங்கள் 21 லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னை விமான நிலையம் விடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஹஜ் பயணிகள் கேரள மாநிலம் கொச்சியில் போய் விமானம் ஏறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு செல்லும் பயணிகளில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்கள். அவர்கள் கொச்சி போய் விமானம் ஏறுவது என்பது மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாக்கும். ஹஜ் பயணிகளின் கஷ்டங்கள், வசதி குறைவை கருத்தில்கொண்டு, இதற்கு முன்பாக இருந்த ஆண்டுகளைபோலவே சென்னையில் இருந்து நேரடியாக விமானங்களை இயக்குவதற்கு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசு இந்த பயணிகள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும்போது பாதுகாப்பாக அனுப்பும் வகையில் அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்