“அமித்ஷாவின் வருகை எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்” - பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன்

தமிழகத்திற்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேல்யாத்திரையில் பங்கேற்க வாய்ப்பில்லை என பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-15 08:31 GMT
சென்னை,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21 ஆம் தேதி மாலை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக கூறப்பட்டாலும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித்ஷாவின் வருகை என்பது ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் சில அரசியல் கட்சித் தலைவர்களை அமித்ஷா சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரை நடத்துவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வேல் யாத்திரையை தொடர்வோம் என பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்தாலும், வேல் யாத்திரையில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை பா.ஜ.க.விற்கு உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள அவர், அமித்ஷாவின் வருகை எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்