தமிழகம் - கர்நாடகம் இடையே அரசு பேருந்துகள் இயக்கம்; பயணிகள் மகிழ்ச்சி
தமிழகம் - கர்நாடகம் இடையே பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.;
பெங்களூரு,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் கர்நாடக பஸ்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. தமிழக பஸ்கள் கர்நாடகத்திற்குள் வரவில்லை. அதன் பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 4 மாதங்களாக ஆந்திரா, தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு கர்நாடகத்தில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்காததை அடுத்து கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. இதையடுத்து இந்த பஸ்கள் அத்திப்பள்ளி வரை இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தீபாவளியையொட்டி பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, தமிழகத்திற்கு கர்நாடக அரசு பஸ்கள் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.அ
இதன் மூலம் 8 மாதங்களுக்கு பிறகு கர்நாடக அரசு பஸ்கள், தமிழகத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பயணம் செய்ய இ-பாஸ் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை 6 நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது இரு மாநிலங்களிடையே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சத்தியமங்கலத்தில் இருந்து 2 பேருந்துள் மைசூருக்கும் மைசூரிலிருந்து கர்நாடக அரசு பேருந்து கோவைக்கும் புறப்பட்டன.
நீண்ட நாளைக்குப் பின் ஆசனூர், பண்ணாரி வனத்தில் கர்நாடக மற்றும் தமிழக அரசு பேருந்துகள் செல்வதைக் காணமுடிகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பயணிகள் கட்டாயம் முக்கசவம் அணிய வேண்டும் என நடத்துநர் கேட்டுக்கொண்டார். அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.