மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.;

Update: 2020-11-08 07:22 GMT
சென்னை,

தீபாவளி திருநாளில் பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் மாசுபடுகின்றன. அத்துடன் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளால் சிறுகுழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகளை உற்பத்தி செய்வதுடன், வரும் காலத்தில் பசுமை பட்டாசுகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளை விதித்து உள்ளது. அத்துடன் இது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், குறிப்பிட்ட பகுதியில் பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு அதே நேரத்தில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிக்க முயற்சிக்கலாம். அத்துடன், அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்