மருத்துவப் படிப்பு: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை...
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் 7.5 % ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
சென்னை
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். உள்பட மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பிறப்பித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சுமார் ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், உள்ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசின் அரசாணை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், மசோதாவுக்கு தமிழக ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 303 மாணவ, மாணவிகள் மருத்துவம் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மார்ச் 21: நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
ஏப்ரல் 14: உள் ஒதுக்கீடு குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.
ஜூன் 8: நீதிபதி கலையரசன் தனது அறிக்கையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேரில் அளித்தார்.
ஜூன் 15: ஜூலை 14: நீதிபதி கலையரசன் அளித்த பரிந்துரைகள் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டங்களில் ஆலோசனை நடத்தப்பட்டது.
செப்டம்பர் 15: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.
அக்டோபர் 5: உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநருடன் முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் சந்தித்தனர்.
அக்டோபர் 20 உள் ஒதுக்கீடு கோரி ஆளுநருடன் அமைச்சா்கள் அடங்கிய குழு சந்தித்தது.
அக்டோபர் 21: உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.
அக்டோபர் 22 - அவகாசம் தேவை என மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநா் பதில் கடிதம்அனுப்பினார்.
அக்டோபர் 29: சட்டத்தின் மூலமாக அல்லாமல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியீடு.
அக்டோபர் 30 உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.