இறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்தக்கூடாது? - உயர்நீதிமன்றம் கேள்வி
இறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.;
சென்னை,
அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை, கட்டாயமாக இறுதியாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கல்லூரிகள் வேண்டுமானால் கால அவகாசம் கோரலாம் என்றும் யுஜிசி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அரியர் தேர்வுகள் குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இறுதி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அரியர் தேர்ச்சி விவகாரம் குறித்து பதில் மனு தாக்கல் செய்யாத யுஜிசிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அரியர் தேர்வு தொடர்பாக தமிழக உயர்கல்வி துறையும், யுஜிசி-யும் பதில் மனு தாக்கல் செய்ய நவம்பர் 20ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.