மரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடைசியாக கூறியது என்ன?
என் மகன் எடப்பாடி பழனிசாமி சிறு வயது முதல் ஏழை- எளிய மக்களோடு பழகி பொதுமக்களின் இன்ப, துன்பங்களை நன்கு உணர்ந்தவன்.
சென்னை,
எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு கவர்னர், ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து உருக்கமாக பேசினார். அதன் விவரம் வருமாறு:-
என் மகன் எடப்பாடி பழனிசாமி சிறு வயது முதல் ஏழை- எளிய மக்களோடு பழகி பொதுமக்களின் இன்ப, துன்பங்களை நன்கு உணர்ந்தவன். எனவே மக்களுக்கு நல்லாட்சி தருவான். கோனேரிப்பட்டி அரசு பள்ளியில் படித்த என் மகன், அப்போது நாங்கள் குடியிருந்த விவசாய தோட்டத்திற்கும், பள்ளிக்கும் 4 மைல் தொலைவிருக்கும், தினசரி நடந்து போய் படித்து வந்தான். பள்ளி படிப்பை முடித்து குமாரபாளையம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தான். தினசரி காவிரி ஆற்றை கடந்து கல்லூரிக்கு சென்று சிரமப்பட்டான். எல்லா கஷ்டமும் தெரிந்தவர் என் மகன். ஏழை-எளிய விவசாய மக்கள் படும் பல்வேறு சிரமங்களை நன்கு உணர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் விதமாக செயல்படுவான். விவசாயத்தை மூச்சாய் நினைப்பவன், நிச்சயம் இறைவன் அருள் புரிவார் என்று நம்பிக்கையில் நானும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.