மீண்டும் அதிர்ச்சி சம்பவம் கோயம்பேடு மார்க்கெட்டில் 50 பேருக்கு கொரோனா
சென்னையில் மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமழிசை துணைக்கோள் நகரத்தில் காய்கறி சந்தையும், மாதவரம் பஸ் நிலையத்தில் பழ சந்தையும், வானகரத்தில் பூ சந்தையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடந்த மாதம் 18-ந் தேதி கோயம்பேடு உணவு தானிய அங்காடியும், 28-ந் தேதி காய்கறி சந்தையும் திறக்கப்பட்டது.
காய்கறி சந்தை திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 200 பெரிய மொத்த வியாபார கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சி.எம்.டி.ஏ. நிர்வாகம் சார்பில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
குறிப்பாக கடந்த மாதம் 18-ந் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் தினந்தோறும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் கடந்த 10-ந் தேதி வரையிலான 22 நாட்களில் 2 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கடந்த 22 நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது 1.5 சதவீதமாகும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று இருக்கிறதா? என்று அந்தந்த மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் வியாபாரிகள், தொழிலாளர்களிடையே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.