ரசீது இல்லாவிட்டால் செல்போன் மூலம் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்யலாம் அதிகாரிகள் தகவல்

‘ரசீது எதுவும் இல்லாத நிலையில் செல்போன் மூலம் ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யலாம்’ என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2020-10-10 23:52 GMT
சென்னை, 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) துறையில் மாதந்தோறும் ஜி.எஸ்.டி.ஆர்.1 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்.3பி தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜி.எஸ்.டி.ஆர். 3பி பொறுத்தவரை மாதந்தோறும் 20-ந் தேதிக்குள், தாமத கட்டணமின்றி தாக்கல் செய்யலாம்.

தற்போது, கணக்கு தாக்கல் செய்ய, பில் ஏதும் இல்லாத நிலையில், செல்போனில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக, ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்யலாம்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) துறைக்கு மாதந்தோறும் 3பி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் எந்த சேவையோ அல்லது விற்பனையோ இல்லை என்றால், அந்த மாதத்திற்கு ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்ய வேண்டும். இதை, செல்போனில் இருந்து குறுந்தகவல் அனுப்பி, தற்போது தாக்கல் செய்ய முடியும். இதற்கு, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதன்படி பதிவு செய்துள்ள நிறுவனத்தின், அதிகாரபூர்வ பதிவாளரின் செல்போன் எண், ‘ஜி.எஸ்.டி. போர்டலில்’ பதிவு செய்திருக்க வேண்டும். முந்தைய காலங்களில், ஜி.எஸ்.டி. ஆர் 3பி தாக்கல் செய்திருக்க வேண்டும். எந்த வரியும் நிலுவையில் இருக்கக்கூடாது மற்றும் தாமத கட்டணமோ அல்லது வட்டியோ செலுத்தி இருக்கக்கூடாது.

இந்த நிபந்தனைகளின்படி, மாதந்தோறும் முதல் நாளோ அதன்பின்போ எப்போது வேண்டும் என்றாலும், குறுந்தகவல் அனுப்பி ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்யலாம். இதற்கு, Nil என டைப் செய்து இடைவெளி விட்டு, 3பி என டைப் செய்து, இடைவெளி விட்டு, GSTIN என ‘டைப்’ செய்து இடைவெளி விட்டு, வரி செலுத்துவதற்கான மாதத்தை குறிப்பிட்டு, 14409 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

இதையடுத்து, ஜி.எஸ்.டி. ‘போர்டலில்‘ இருந்து, செல்போன் எண்ணிற்கு குறியீட்டு எண் வரும். தொடர்ந்து, CNF என டைப் செய்து இடைவெளி விட்டு, 3பி என டைப் செய்து இடைவெளி விட்டு, குறியீட்டு எண்ணை குறிப்பிட்டு மீண்டும் 14409 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு குறுந்தகவல் அனுப்பி, ‘3பி நில்’ ரிட்டன் தாக்கல் செய்யலாம்.

மேற்கண்ட தகவலை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்