கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ திருமண விவகாரம்: பெண்ணின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனு - உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு திருமண விவகாரத்தில் பெண்ணின் தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை வருகிறது.;
சென்னை,
கள்ளக்குறிச்சி தனித் தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு (34). இவர் தன்னைவிட 15 வயது குறைவான, தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சவுந்தர்யாவைக் காதலித்து வந்தார். சவுந்தர்யா திருச்செங்கோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர்கள் காதலைப் பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1-ம் தேதி திடீரென சவுந்தர்யா வீட்டிலிருந்து மாயமானார்.
இந்நிலையில் நேற்று காலை பிரபு - சவுந்தர்யா திருமணம் நடைபெற்றது. அவர்களின் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. சவுந்தர்யா திருமணத்திற்கு வீட்டில் மறுப்புத் தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழு மனதுடன் திருமணம் செய்துகொண்டதாக பிரபு காணொலி ஒன்றை வெளியிட்டார்.
அதிமுக எம்எல்ஏ பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்து தன் மகளைக் கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு, கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாங்க மறுத்த காவல்துறை, சாமிநாதனைப் பொது இடத்தில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ பிரபுவால் தன் மகள் கடத்தப்பட்டதாகவும், மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை சாமிநாதன் நேற்று ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவில், 'கல்லூரியில் படிக்கும் பெண்ணிடம் எம்எல்ஏ பிரபு ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிக் கடத்திவிட்டார்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் இன்று முறையீடு செய்யப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் நாளை (அக்டோபர் 7) இந்த வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.