பாமரருக்கும் பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் பா.சிவந்தி ஆதித்தனார் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
பாமரருக்கும் பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், அவரது 85வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இதனை கடந்த பிப்ரவரி மாதம் 22ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 24ந்தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளில் அவரது உழைப்பினையும், சாதனைகளையும் பெருமையுடன் நினைவு கூர்கிறேன். பத்திரிக்கை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரம் தொட்டவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளையாட்டு, கல்வி, தொழில் என பல துறைகளில் சாதனை படைத்தவர் பா.சிவந்தி ஆதித்தனார். விளையாட்டுத் துறையில் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர்.
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பாமரருக்கும் பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியவர். பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளில் அவரது பெருமைகளையும், புகழையும் போற்றி நினைவு கூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.