மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 800-ஐ கடந்தது

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2020-09-20 23:15 GMT
சென்னை,

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் உயிரிழப்பு 8 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

புதிதாக தொற்று

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 84 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,409 ஆண்கள், 2,107 பெண்கள் என மொத்தம் 5,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 112 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 665 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 996 பேரும், கோவையில் 568, கடலூரில் 297 பேரும், சேலத்தில் 291 பேரும், செங்கல்பட்டில் 283 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 11 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 62 லட்சத்து 74 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பரிசோதனையின் முடிவில், 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 699 ஆண்களும், 2 லட்சத்து 15 ஆயிரத்து 264 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 30 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 22 ஆயிரத்து 675 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 70 ஆயிரத்து 316 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

60 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 38 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேரும் என 60 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 12 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், கோவை, சேலத்தில் தலா 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், கடலூர், ஈரோட்டில் தலா 3 பேரும், காஞ்சீபுரம், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூர் தலா 2 பேரும், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 8,811 பேர் உயிரிழந்துள்ளனர்.

5,206 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 206 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,263 பேரும், கோவையில் 488 பேரும், சேலத்தில் 259 பேரும், கடலூரில் 248 பேரும் அடங்குவர்.

இதுவரையில் தமிழகத்தில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 479 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 46 ஆயிரத்து 703 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 924 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 242 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்