போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததால் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர்

போக்குவரத்து போலீசாரை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த லோடு ஆட்டோ டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-19 23:19 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நீலாங்கரை வைத்தியலிங்கம் சாலையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 50). லோடு ஆட்டோ டிரைவர். இவருக்கு 3 மகள்களும், மாற்றுத்திறனாளி மனைவியும் உள்ளனர்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர், 20 நாட்களுக்கு முன்புதான் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். இவர், கடந்த 10 தினங்களாக லோடு ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார், அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவரிடமிருந்து அபராத தொகையை வசூலிக்க வங்கி ஏ.டி.எம். கார்டை போலீசார் கேட்டதாகவும் தெரிகிறது. இதனால் அவர், கடந்த 3 தினங்களாக பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அபராத தொகையை செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய முத்துக்குமார், திடீரென பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு ஆதி திராவிடர் உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள சுமார் 100 அடி உயர செல்போன் கோபுரத்தின் மீது ஏறி மிரட்டல் விடுத்தார்.

இதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர். நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் விஸ்வேஸ்ராயா, இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசாரும், திருவான்மியூர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி மிரட்டல் விடுத்த முத்துக்குமாரிடம், சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கிவர வைத்தனர். பின்னர் போலீசார் முத்துக்குமாரை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்த பின்னர் நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்