தோல்வி பயத்தால் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி
‘நீட்’ தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார்.;
பாலக்கோடு
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு அச்சத்தில் தர்மபுரி மாணவர் ஆதித்யா, திருச்செங்கோடு மாணவர் மோதிலால், மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது பற்றி விவரம் வருமாறு:-
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை அடுத்த சாமனூர் கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவர் சாஸ்திரமுட்லு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் மோகனப்பிரியா (வயது 17). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்தார். மாணவி மருத்துவம் படிக்க தீவிரமாக படித்து வந்தார். இதற்காக நேற்று முன்தினம் அவர் குமாரபாளையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் நீட் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாணவி வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை தின்று விட்டு ஒரு அறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் விசாரித்தபோது நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக வந்துவிடும் என்ற பயத்தில் மாத்திரைகளை தின்று விட்டதாக கூறியுள்ளார்.
உடனே அவர்கள் மகளை மீட்டு மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீட்தேர்வு பயத்தில் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.