முககவசம் உயிர் கவசம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்- சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
முககவசம் உயிர் கவசம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வீடுகளை விட்டு வெளியில் வரும் மக்கள் முககவசம் அணிய மறக்க கூடாது. முககவசம் உயிர் கவசம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். முககவசம் அணிவதன் அவசியம் பற்றி தினமும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
மக்கள் தங்கள் நலன் கருதியும், சுற்றி இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டும் முககவசம் அணிய மறக்க கூடாது. கொரோனா விலகும் வரையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மழைக்காலம் தொடங்கி இருப்பதால் கூடுதல் கவனம் தேவை. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிலர் 3 நாட்கள் வரை காத்திருந்து அதன் பின்னரே பரிசோதனைக்கு செல்கிறார்கள்.
காய்ச்சல் ஏற்பட்டவுடன் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும். அதிக அளவில் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதால் நோய் பரவலை கட்டுப்படுத்த முடிகிறது. பொதுமக்கள் மேலும் ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் கொரோனாவை விரட்ட முடியும்.
நாம் அனைவரும் இனிமேல்தான் உஷாராக இருக்க வேண்டும். ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட பிறகு மக்களிடம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் பழக்கம் குறைவது போன்று தெரிகிறது.
துளி அளவு கூட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தவறக்கூடாது. பொது இடங்களில் கூடும்போதும் சமூக இடைவெளியை மறக்காமல் பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை. அனைவரையும் முககவசம் அணிய செய்து சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க செய்ய வேண்டும் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.