தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.;
சென்னை,
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்த தங்களுக்கு, சுங்க கட்டண உயர்வு மேலும் சுமையை அளிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இப்பொழுதுதான் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் ஒரளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்புகின்ற இந்த சூழ்நிலையில், இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு பொதுமக்களை மிகவும் பாதிக்கும்.
ஊரடங்கினால் வேலையின்மையும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டு, மக்கள் அவதியுறும் நிலையில் நெடுஞ்சாலைத் துறை சுங்க கட்டணத்தை உயர்த்தியதால், சரக்கு வாகனங்களின் கட்டணம் உயரும். அதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும். இதனால், மேலும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். பெட்ரோலியம் துறை வேறு தினம்தோறும் சிறுக சிறுக பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிக்கொண்டு உள்ளது. இதனாலும் விலைவாசி மேலும் உயரும் வாய்ப்பும் உள்ளது.
எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொதுமக்களின் நலன் கருதி, சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து, உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.