மறைத்துவைத்த மரணங்கள் கொரோனா இறப்பு பட்டியலை தேதி, மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா பரவத் தொடங்கிய நாள் முதல் இறந்தோர் பட்டியலை தேதி மற்றும் மாவட்டவாரியாக வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-07-23 23:51 GMT
சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், காணொலி உரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“3 நாட்களில் கொரோனா ஒழிந்துவிடும், 10 நாட்களில் கொரோனாவை அழித்து விடுவேன்“ என்று சவால்களை விட்டுவந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா நோய்த் தோற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 144 ஆகிவிட்டது. நேற்று வரைக்கும் 2,700 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசாங்கம் கூறியது. ஆனால் ஒரே நாளில் 3 ஆயிரத்து 144 எப்படி ஆனது?.

இதுவரையில் மறைத்துவைத்த மரணங்களை இனியும் மறைக்க முடியாமல் வெளியில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மரணமடைந்தவர் உடல் எவ்வளவுதான் மறைத்தாலும் ஒருவாரத்தில் வெளியே தெரிய ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள். மறைப்பது அரசாங்கமாக இருந்ததனால் 2 மாதம் வரையில் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) இந்த அரசாங்கம் சொன்ன ஒரு விஷயத்தை என்ன காரணம் சொன்னாலும், நியாயப்படுத்தவே முடியாது. அவ்வளவு கொடுமையான விஷயம் அது. ‘மார்ச் 1-ந் தேதி முதல் ஜூன் 10-ந்தேதிவரையில் இறந்தவர் எண்ணிக்கையில் 444 மரணங்கள் விடுபட்டுவிட்டது. அதை இன்றைய கணக்கில் சேர்த்துள்ளோம்‘ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்படி என்றால் என்ன அர்த்தம்? மார்ச் 1-ந்தேதியில் இருந்து இன்றைக்கு வரைக்கும் தினமும் பொய் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அதுதான் உண்மை. மரணத்தை இந்த அரசாங்கம் மறைக்கிறது என்று ஜூன் 15-ந்தேதி அன்றைக்கே நான் சொன்னேன். பீலா ராஜேஷ் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக இருந்த வரையில், 236 மரணங்கள் மட்டுமே மறைக்கப்பட்டதாகச் சொன்னார். இப்போது ராதாகிருஷ்ணன் வந்தப்பிறகு 444 மரணங்கள் இதுவரை மறைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். முதல்-அமைச்சருக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்குப் பயந்துகொண்டு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர்கள் மறைத்துள்ளார்கள்.

மரணத்தை மறைத்தார்கள்; இப்போது மறைக்க முடியாத அளவுக்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமானதும், வேறுவழியில்லாமல் வெளியில் சொல்லிவிட்டார்கள். இவர்களது அரசியல் லாபங்களுக்கு மக்களை பலியிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்.

“தமிழகத்தில் கொரோனா இறப்பை அரசு மறைக்கவில்லை. கொரோனா உயிரிழப்பு விவரத்தை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை“ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னது பொய் என்று இப்போது அரசாங்க அறிக்கையே மெய்ப்பித்துவிட்டது.

கொரோனா பரவ தொடங்கியது முதல் இன்றுவரை இறந்தோர் பட்டியலை தேதி வாரியாக, மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு இந்த அரசாங்கம் உண்மையாக இருப்பதாகச் சொல்ல முடியும். கொரோனா குறித்த தகவல்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும். சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா?, இல்லையா? பரிசோதனை எண்ணிக்கையை மாவட்ட வாரியாக கொடுங்கள் என்று நான் தினமும் கேட்டேன். சரியான பதில் இல்லை.

கொரோனா மரணங்களில் மர்மம் உள்ளது என்பது குறித்து நான் சொன்னபோதெல்லாம் அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என்று எரிந்து விழுந்தார்கள் தமிழ்நாட்டு அமைச்சர்கள். இப்போது 444 மரணங்கள் வெளியில் வந்துள்ளன. இன்னும் இதுபோல் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டதோ? என்ற சந்தேகமும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்