காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அடையாள அட்டையுடன் வந்த வியாபாரிகள் மட்டும் மீன் வாங்க அனுமதி

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்கு அடையாள அட்டையுடன் வந்த வியாபாரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

Update: 2020-07-22 23:27 GMT
திருவொற்றியூர்,

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்கு அடையாள அட்டையுடன் வந்த வியாபாரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி வியாபாரிகள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 115 நாட்களுக்கு பிறகு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள், கடந்த சனிக்கிழமை முதல் கரைக்கு திரும்பினர். அப்போது மீன் வாங்குவதற்கு வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் மீன் சந்தையில் குவிந்தனர். இதனால் அங்கு சமூக இடைவெளி கேள்விக்குறியானது.

இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை என 5 மணி நேரம் மட்டுமே மீன் விற்பனை நடைபெற வேண்டும். பொதுமக்கள் மீன் வாங்க மீன்பிடி துறைமுகத்துக்கு வர அனுமதி கிடையாது. அடையாள அட்டை உள்ள படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை விசைப்படகு மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரை திரும்ப தொடங்கினர். ஒவ்வொரு விசைப்படகும் மீன் விற்பனை செய்ய தனி இடம் ஒதுக்கப்பட்டது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு கயிறு மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

நேற்று சுமார் 150 விசைப்படகுகள் கரை திரும்பின. கட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. சமூக இடைவெளியுடன் வியாபாரிகள் மட்டும் மீன்களை வாங்கி சென்றனர். சங்கரா, கிழங்கா, காரைப்பொடி, கவலை, மத்தி உள்ளிட்ட சிறிய வகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவிந்திருந்தது. இதனால் மீன் விலை சற்று குறைவாக இருந்தது.

பெரிய வகை மீன்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனைக்கு வரவில்லை. ஆனால் ஆழ் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வருகிற சனிக்கிழமை கரைக்கு வரும்போது பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக இடைவெளியை பின்பற்ற வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உதவி கமிஷனர்கள் தினகரன், ஜூலியஸ் சீசர் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மீன்பிடி துறைமுகத்தின் நான்கு வாயில்களிலும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அடையாள அட்டையுடன் வந்த மீன் வியாபாரிகளை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்