சென்னையில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னையில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இதில், இந்தியாவிலேயே சென்னை தான் முதல் இடம் ஆகும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காய்கறி-பழம், மளிகைக் கடைகள், இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட அங்காடி மேலாண்மை குழுக்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் கமிஷனர் கோ.பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத அங்காடிகள் மற்றும் மார்க்கெட் வளாகத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை மாநகராட்சியில் 5.50 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், இந்தியாவிலேயே சென்னை தான் முதல் இடம் ஆகும். தினசரி 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி, துணை கமிஷனர்(பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், வட்டார துணை கமிஷனர்கள் பி.ஆகாஷ், பி.என்.ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.