4,059 பேர் ‘டிஸ்சார்ஜ்’ தமிழகத்தில் ஒரே நாளில் 51 ஆயிரத்து 640 பேருக்கு பரிசோதனை புதிதாக 4,979 பேர் பாதிப்பு; 78 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 51 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2020-07-20 00:00 GMT
சென்னை,

தமிழகத்தில் ஒரே நாளில் 51 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,979 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 78 பேர் உயிரிழந்தனர். 4,059 பேர் குணம் அடைந்தனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் ஒரே நாளில் 51 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 937 ஆண்கள், 2 ஆயிரத்து 42 பெண்கள் என 4 ஆயிரத்து 979 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 17 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 60 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 256 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 647 முதியவர்களும் அடங்குவர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று ஏற்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 1,254 பேரும், திருவள்ளூரில் 405 பேரும், செங்கல்பட்டில் 306 பேரும், குறைந்த பட்சமாக கிருஷ்ணகிரியில் 7 பேரும், ஈரோட்டில் 4 பேரும் இடம் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் இதுவரை 18 லட்சத்து 55 ஆயிரத்து 817 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1 லட்சத்து 3 ஆயிரத்து 907 ஆண்களுக்கும், 66 ஆயிரத்து 763 பெண்களுக்கும், 3-ம் பாலினத்தவர் 23 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 12 வயதுக்கு உட்பட்ட 8 ஆயிரத்து 507 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 20 ஆயிரத்து 987 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் 55 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் என 78 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகினர். இதில் பல்வேறு நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான 75 பேரும், கொரோனா நோய் தொற்றால் மட்டும் பாதிக்கப்பட்ட 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

21 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 27 பேரும், மதுரை, செங்கல்பட்டில் தலா 8 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், சேலத்தில் 4 பேரும், கன்னியாகுமரி, திண்டுக்கலில் தலா 3 பேரும், கோவை, கடலூர், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தேனி, வேலூரில் தலா இருவரும், விருதுநகர், விழுப்புரம், திருச்சி, தூத்துக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இடம்பெற்றனர். கொரோனாவுக்கு இதுவரையில் 2 ஆயிரத்து 481 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 4 ஆயிரத்து 59 பேர் நேற்று கொரோனாவில் இருந்து மீண்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,189 பேரும், திருவள்ளூரில் 352 பேரும், செங்கல்பட்டில் 269 பேரும் குணம் பெற்றனர். இதுவரையில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர் குணம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்