புதிதாக 4,538 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவுக்கு ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 4,518 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 56 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேர் என 79 பேர் நேற்று பலியாகி உள்ளனர். 16 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.
சென்னையில் 36 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், கோவை, திருவள்ளூரில் தலா 5 பேரும், திருவண்ணாமலை, ராமநாதபுரம், மதுரையில் தலா 4 பேரும், வேலூர், திருச்சியில் தலா 3 பேரும், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், தேனி, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 17 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 58 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 538 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,243 பேரும், மதுரையில் 263 பேரும், திருவள்ளூரில் 220 பேரும் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நேற்று 2 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னையில் 1,329 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 234 பேர், விழுப்புரம் மாவட்டத்தில் 220 பேர் என தமிழகம் முழுவதும் 3,391 பேர் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய புதிதாக சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு தனியார் நிறுவனத்துக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் 55 அரசு நிறுவனங்கள், 54 தனியார் நிறுவனங்கள் என 109 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. புதிதாக 47 ஆயிரத்து 539 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதுவரை 17 லட்சத்து 56 ஆயிரத்து 998 பேருக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.