சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2020-07-13 21:00 GMT
சென்னை,

சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்தில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோபாலபுரம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். பின்னர், அங்குள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். நடமாடும் கொரோனா தொற்று பரிசோதனை வாகனத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதையும் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இது, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒவ்வொரு தெருக்களுக்கும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று கொரோனா தொற்று இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆரம்ப நிலையிலே கொரோனா தொற்றை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்படுவதால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதேவேளையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

தெருத்தெருவாக மருத்துவமுகாம் நடத்தி காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. யாருக்கேனும் கொரோனா தொற்று இருப்பின் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை, மருந்துகள் வீட்டிற்கே சென்று வழங்கப்படுகிறது. அலோபதி மருந்துடன் சித்தா, ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்படுகிறது. சோப்பு போட்டு கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் இடத்தில் இருந்த திரு.வி.க நகர் மண்டலம் தமிழக அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் 7-வது இடத்திற்கு வந்துள்ளது.

திரு.வி.க. நகர் மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர், தாளிசாளி மாத்திரை, ஆடாதொடை மணப்பாகு கூட்டு மருந்து வழங்கப்படுவதால் நல்ல பலனை அளித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்