தமிழகத்திற்கு ஆன்மிக பயணமாக வந்து, சிறையில் உள்ள வெளிநாட்டினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு ஆன்மிக பயணமாக வந்து, சிறையில் உள்ள வெளிநாட்டினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-07-09 03:24 GMT
சென்னை, 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தோனேசியா, பிரான்ஸ், மலேசியா, தாய்லாந்து உள்பட 9 நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு ஆன்மிக பயணமாக வந்த 12 பெண்கள் உள்பட 129 இஸ்லாமியர்கள் மீது தமிழகத்தில் 15 காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 98 பேருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவர்களை சென்னை நகருக்குள் தங்கியிருக்க வேண்டும் என்றும், அதுகுறித்த விவரத்தை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இருந்தபோதிலும் அவர்கள் அனைவரும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் தடுப்பு முகாம்கள் பற்றிய வழிகாட்டுதல்களை கவனத்தில் கொள்ளாமலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமலும் அவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது.

எனவே, இந்தப்பிரச்சினையில் முதல்-அமைச்சர் தலையிட்டு, சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்கை முடித்து அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பும் வரை, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் விரும்பும் தனியார் இடங்களில் அரசின் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்