டெல்டா குறுவை சாகுபடி இந்த ஆண்டு சாதனை படைக்கும் - வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அறிக்கை

மேட்டூர் அணையில் சரியான தேதியில் நீர் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு டெல்டா பகுதி குறுவை சாகுபடியில் சாதனை படைக்கப்படும் என்று வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

Update: 2020-07-01 22:30 GMT
சென்னை,

வேளாண் உற்பத்தி ஆணையரும், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 43.42 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 36 சதவீதமான 15.89 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு டெல்டா மாவட்டங்களில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடி ஜூன், ஜூலை மாதங்களிலும், சம்பா சாகுபடி ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும், தாளடி சாகுபடி அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் பயிரிடப்படுகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும், கடலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறுவை சாகுபடி காவிரி நீரையே நம்பியுள்ளது. பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8 ஆண்டு கால இடைவெளியில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கும் மேலாக, 90 நாட்களைக் கடந்து நீடிக்கிறது. போதுமான அளவில் நீர் இருப்பு உள்ளதைக் அறிந்த அரசு, நீர் திறப்பு தேதியை முன்கூட்டியே அறிவித்தது. இதனால், ஆற்றுக் கால்வாய்களில் நீர் வருவதற்கு முன்பே நாற்றங்கால் மற்றும் நடவுப் பணியில் விவசாயிகள் ஈடுபட வசதி வாய்ப்பு கிடைத்தது.

கடந்த ஜூன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணையை முதல்அமைச்சர் திறந்து வைத்தார். டெல்டா பகுதியில் இந்த குறுவை காலகட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கரில் 6.07 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்ய வேளாண்மைத் துறை திட்டமிட்டுள்ளது.

முன் குறிக்கப்பட்ட தேதியில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு இருப்பதால், இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட பகுதியில் தண்ணீர் வசதி கிடைக்கப்பெற்று குறுவை காலத்தில் அரிசி உற்பத்தியில் சாதனை படைக்கப்படும்.

3,796 டன் குறுகிய கால விதை நெல் சிஓ 51, ஏடிடி 43, 45, 36, 37, ஏஎஸ்டி 16, டிகேஎம் 9 மற்றும் ஐ.ஆர்.50 ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2,131 டன் விதை நெல், வழங்குவதற்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதத்திற்கு 37 ஆயிரத்து 450 டன் உரம் தேவைப்படுகிறது. தற்போது ஒரு லட்சத்து ஆயிரத்து 40 டன் உரம் (யூரியா27 ஆயிரத்து 500 டன், டிஏபி 19 ஆயிரத்து 240 டன், பொட்டாஷ்- 13 ஆயிரத்து 910 டன், காம்ப்ளக்ஸ் - 35 ஆயிரத்து 870 டன், எஸ்.எஸ்.பி.4,470 டன்) டெல்டா மாவட்டங்களில் கைவசம் உள்ளன.

அதோடு, டிராக்டர், நாற்று நடும் எந்திரங்கள், தெளிப்பான், உரக்கலவை எந்திரம் போன்ற வேளாண் எந்திரங்கள் பயன்பாட்டுக்கு ஏதுவாக தேவையான அளவில் உள்ளன. அவை வேளாண் விரிவாக்க மையங்கள், தனியார் கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.

குறுகிய காலம் மற்றும் உப்பு சகிப்பு கொண்ட வகைகளான டிகேஎம்-9, ஏடிடி-45 போன்றவற்றை கடைமடைப் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பு அறுவடை செய்யும் வகையிலான விதைப்பு முறைகளை பின்பற்றவும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்