வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கக் கூடாது - ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்
வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கக் கூடாது என ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 29.51 ஹெக்டேர் நிலப்பரப்பில் கடந்த 1996-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு 27 வகை பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.
இந்த பறவைகளைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் வேடந்தாங்கலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்த சரணாலயத்தின் பரப்பளவை குறைத்து அறிவிப்பதற்கான கருத்துருவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் தேசிய விலங்குகள் நல வாரியத்திற்கு கடந்த மார்ச் 19-ந்தேதி அனுப்பியுள்ளார்.இதனால் சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும். நிலத்தடி நீர் அப்பகுதியில் குறைந்துவிடும். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கும், தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கும் அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.