தினமும் உயிர் பலி கேட்கும் கொரோனா: தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழப்பு - புதிதாக 2,141 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று 49 பேர் உயிரிழந்தனர். புதிதாக 2,141 பேருக்கு தொற்று ஏற்பட்டது.;
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தினமும் உயிர் பலி கேட்கிறது. சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்து உள்ளனர். புதிதாக 2,141 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500-ஐ கடந்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 1,280 ஆண்கள், 861 பெண்கள் என 2 ஆயிரத்து 91 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 40 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 ஆயிரத்து 141 பேர் புதிதாக கொரோனாவில் சிக்கி உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வந்த 13 பேரும், என மொத்தம் 49 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு 625 ஆக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் சென்னையில் மட்டும் 34 வயது வாலிபர் உட்பட 40 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் பலி எண்ணிக்கை எண்ணிக்கை 501 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டியில் 5 பேரும், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலையை சேர்ந்த தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 1,017 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரத்து 641 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 23 ஆயிரத்து 65 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சென்னை மருத்துவமனைகளில் மட்டும் 12 ஆயிரத்து 570 பேர் உள்ளனர். தமிழகத்தில் நேற்று 26 ஆயிரத்து 736 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், சென்னையில் 1,373 பேரும், திருவள்ளூரில் 123 பேரும், செங்கல்பட்டில் 115 பேரும், காஞ்சீபுரம், வேலூரில் தலா 55 பேரும், தென்காசியில் 34 பேரும், நெல்லையில் 30 பேரும், ராமநாதபுரத்தில் 28 பேரும், திருவண்ணாமலை, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா 27 பேரும், கோவையில் 23 பேரும், தஞ்சாவூரில் 21 பேரும், ராணிப்பேட்டையில் 20 பேரும், கன்னியாகுமரியில் 19பேரும், கடலூரில் 17 பேரும், சேலத்தில் 16 பேரும், சிவகங்கையில் 15 பேரும், திருச்சியில் 14 பேரும், விருதுநகரில் 13 பேரும், நாகப்பட்டினத்தில் 10 பேரும், மதுரையில் 9 பேரும், திருவாரூரில் 8 பேரும், புதுக்கோட்டையில் 7 பேரும், தேனியில் 6 பேரும், திருப்பூர்,திருப்பத்தூர், நீலகிரியில் தலா 4 பேரும், அரியலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூரில் தலா 3 பேரும், தர்மபுரி, திண்டுக்கலில் தலா இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 86 குழந்தைகளும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 1,771 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 284 முதியவர்களும் நேற்று பாதிப்புக்கு உள்ளாகினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.