மூதாட்டியை சுடுகாட்டில் விட்டுச்சென்ற குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது
மூதாட்டி ஒருவரை அரவது குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டுச்சென்றுள்ளனர். இவர் அங்கு தவித்து வரும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை சுண்டக்காமுத்தூரில் உள்ள சுடுகாட்டில், மூதாட்டி ஒருவர் கடந்த 4 நாட்களாக கேட்பாரற்று தனிமையில் கிடந்தார். இதனைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள் கொரோனா அச்சம் காரணமாக சற்று தூரம் தள்ளி நின்று சாப்பாடு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் மூதாட்டியின் நிலையை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை பார்த்த த.மு.மு.க. மருத்துவ அணி செயலாளர் முகமது ஆசிக் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்தார்.
ஆனால் அவரால் பேச முடியவில்லை. மேலும் அவரது தலையில் காயம் இருந்ததும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதி
இதையடுத்து அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு த.மு.மு.க தன்னார்வ அமைப்பினர் அழைத்துச் சென்றனர். அங்கு மூதாட்டியின் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மூதாட்டிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.
இதைத் தொடர்ந்து மூதாட்டியை காப்பகத்தில் சேர்ப்பதற்காக பல இடங்களுக்கு சென்று பார்த்தனர். கொரோனா அச்சம் காரணமாக யாரும் மூதாட்டியை சேர்க்க மறுத்து விட்டனர்.
காப்பகத்தில் ஒப்படைப்பு
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறார். அந்த மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில், அவர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்த விஜயா (வயது 60) என்பதும், அவரை குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது. கோவையில் மனிதநேயம் மறைந்துபோனதை எடுத்து காட்டும் வகையில் இந்த சம்பவம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கோவையில் மூதாட்டியை குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.