தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடுவதை கண்டித்து தொடர் போராட்டங்கள் - மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

கோவையில் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Update: 2020-06-07 21:02 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை மாவட்ட கட்சியின் பகுதி, ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் கோவை மண்டல சட்ட பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலமாக நேற்று நடந்தது.

இதில் தி.மு.க.வின் கோவை மண்டல சட்டப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் கே.எம்.தண்டபாணி, பி.ஆர்.அருள்மொழி, கட்சியின் சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் கிரிராஜன், மூத்த வக்கீல்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் ந.பழனிசாமி, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் விவரம் வருமாறு:-
தி.மு.க.வினரை மட்டும் கைது செய்வதா?
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி மக்களை பாதுகாப்பதை விட, அரசியல் ரீதியாக தன்னை எதிர்ப்பவர்களை வஞ்சம் தீர்த்துக் கொள்வதில் தான் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கவனம் இருக்கிறது. இதனை கண்டித்து கடந்த 5-ந்தேதி கோவையில் தி.மு.க.வினர் நடத்திய, ஜனநாயக வழியிலான கண்டன ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கொரோனா காலத்தில், அதற்கான விதிமுறைகளையும் தனிமனித இடைவெளியையும் பின்பற்றி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

கடந்த 1-ந்தேதி ஆளும்கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. அதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்? எங்காவது கைது செய்தார்களா? இல்லவே இல்லை. ஆனால் கோவை தி.மு.க. வினரை மட்டும் கைது செய்கிறார்கள் என்றால் சட்டம் என்பது கட்சிக்குத் தகுந்தமாதிரி வளைக்கப்படுகிறது என்பது தானே அர்த்தம்.

கோவை மாவட்டத்தை ஒரு தீவு போல நினைத்து, சர்வாதிகார போக்குடன் தனியாட்சி நடத்தி வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. கொரோனா நோய் சூழலிலும் இத்தகைய போராட்டங்களைத் தவிர்க்கலாம் என்று நினைத்தாலும், ஆளும் கட்சியின் அமைச்சரே அட்டூழியங்கள் நடத்தும் போது, மக்களின் சார்பில் அதைத் தட்டிக் கேட்கவேண்டும் என்பதாலேயே எதிர்த்து நாமும் போராட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். ஜனநாயகக் கடமையுடன் மக்கள் கடமையாற்றும் தி.மு.க.வினர் மீது காவல்துறையை ஏவி பொய் வழக்குப் போடும் அராஜக நடவடிக்கையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனடியாக நிறுத்தாவிட்டால் அதற்கான தொடர் போராட்டங்களை அவர் சந்திக்க நேரிடும்.

இவ்வாறு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்