வெளி மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை
வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
சென்னை,
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மாநகராட்சி கமிஷனர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட, முக கவசங் களை அணியவும், சமூக இடைவெளியினை பின்பற்றவும், சோப்பை உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தவும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. நோய்த் தொற்றின் பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் தளர்வுகளை அறிவிக்கும்.
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்புவதற்கு முடியாமல் உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை மத்திய அரசின் “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் 10 சிறப்பு விமானங்கள் மூலம் 1,665 நபர்களும், 2 கப்பல்கள் மூலம் 264 நபர்களும் தமிழ்நாடு திரும்பி உள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு திரும்ப விரும்பும் மேலும் பல தமிழர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து அவர்களையும் அழைத்து வர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களை சிறப்பு ரெயில் மூலம் படிப்படியாக அழைத்துவர விரைவான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதேபோல், டெல்லியில் இருந்து இந்த வாரம் 2 முறை ராஜதானி விரைவு ரெயில் இயக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் வாரத்துக்கு 2 நாட்கள் இந்த விரைவு ரெயிலை இயக்க மத்திய அரசின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.