சாலைகளில் ‘தெர்மல் ஸ்கேனர் கேமராக்களை’ பொருத்தக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சீனாவில் உள்ளதுபோல, கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை கண்டுபிடிக்க சாலைகளில் ‘தெர்மல் ஸ்கேனர் கேமராக்களை’ பொருத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-17 21:30 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பிலால் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் திணறி வருகின்றன. ஆனால், கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வைரஸ் மீண்டும் பரவாமல் தடுக்க சீனாவில் பல்வேறு தொழில் நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, உடல் வெப்பத்தை கணக்கிட சென்சாருடன், அனைவரது செல்போன்களிலும் ‘ஹெல்த் கோட்’ என்ற ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர். இந்த செயலி மூலம் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்றால் பச்சை நிறமும், வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளோர் என்றால் மஞ்சள் நிறமும், வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்து ஆபத்தான நிலையில் உள்ளோர் என்றால் சிவப்பு நிறமும் அவர்களது செல்போனில் ஒளிரும். இதன்மூலம் வைரஸ் தொற்று உள்ளவர்களை கண்டுபிடிக்கலாம்.

கண்டுபிடித்து விடும்

இதுதவிர சாலைகளில் ‘தெர்மல் ஸ்கேனர்’ எனப்படும் கண்காணிப்பு கேமராக்களையும் சீனாவில் பொருத்தியுள்ளனர். இந்த கேமரா ஒரே நேரத்தில் 200 பேரை பரிசோதிக்கும் திறன் உடையது. யாருக்காவது வைரஸ் தொற்று இருந்தால், இந்த தெர்மல் ஸ்கேனர் கேமராக்கள் கண்டுபிடித்துவிடும். இதன் மூலம் வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுக்க முடியும். இவ்வாறு, சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கப்பட்டுள்ளன.

எனவே, இதுபோல நம் நாட்டிலும் ‘ஹெல்த் கோட்’ செயலியை போல ஒரு செயலியை கண்டுபிடித்து அனைவரது செல்போனில் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவும், பொது இடங்களில் தெர்மல் ஸ்கேனர் கேமராக்களை பொருத்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தள்ளிவைப்பு

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். மனுதாரர் ஆஜராகி வாதிட்டார். பின்னர், விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்