நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவு - சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என்று சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.;

Update: 2020-05-17 20:30 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் மற்றும் மண்டல அளவிலான சிறப்பு குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ராயபுரம் மண்டலம் வார்டு 58 மற்றும் 59-க்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரியும், வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முககவசம் அணிவது மிகவும் இன்றியமையாதது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. அந்த அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் குடிசை பகுதிகளில் வாழும் 26 லட்சம் பேருக்கு 50 லட்சம் முககவசங்களை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முககவசங்கள் வழங்கும் பணி கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. இதுவரை சுமார் 2 லட்சம் மறுபயன்பாடுடன் கூடிய துணியால் ஆன முககவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. நோய்தொற்று பாதித்த ஒரு நபரால் குறைந்தபட்சம் 3 நபர்களுக்கும் அதிகபட்சம் 10 நபர்களுக்கும் இந்த நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே, கட்டாயம் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து ஏதேனும் கடைகளுக்கோ அல்லது அத்தியாவசிய தேவைகளுக்கோ வெளியே சென்று வரும் போது சோப்பு பயன்படுத்தி கைகளை நன்கு கழுவ வேண்டும். ராயபுரம் மண்டலத்தில் நோய்தொற்று பாதித்த பகுதிகள் 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டு மண்டல அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாள்தோறும் 500 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் நோய்த்தொற்றின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது வடக்கு வட்டார துணை ஆணையாளர் பி.ஆகாஷ், ராயபுரம் மண்டல அலுவலர் சி.லாரன்ஸ், செயற்பொறியாளர் ஜி.சொக்கலிங்கம் பிள்ளை உட்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்