டாக்டர் உடலை அடக்கம் செய்ய விடாமல் கலவரம்; கைதான 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவு
டாக்டர் உடலை அடக்கம் செய்ய விடாமல் கலவரத்தில் கைதான 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
கொரோனா வைரஸ் தொற்றால் இறந்து போன சென்னை டாக்டர் சைமன் ஹெர்குலஸ் (வயது 56) உடலை சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் சாலை மறியலில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து வேலங்காடு சுடுகாட்டுக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்ட போது அங்கும் அடக்கம் செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது.
இதுதொடர்பாக சென்னை அண்ணாநகர் மற்றும் டி.பி.சத்திரம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இவர்களில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த பலரது மனுவை சென்னை செசன்சு கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கைதான குமார், நாகேந்திர தஸ்ரிகுண்டா, மஞ்சுளா, சரசுவதி, தினேஷ், பத்மபிரியா, கிருஷ்ணவேணி, மாரியம்மாள் ஆகிய 8 பேர் ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை காணொலி காட்சி மூலம் விசாரித்த நீதிபதி ஆர்.செல்வக்குமார், மனுதாரர்கள் 8 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.