அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம்- முதல்வர் பழனிசாமி
சென்னையில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு சென்றவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய பிறகு முதல்வர் பழனிசாமி கூறியதாவது: மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். சென்னையில் இருந்து சொந்த மாவட்டங்கள் சென்ற அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. சென்னையில் நெரிசலான பகுதிகளில் 26 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையை முதலில் வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால், வியாபாரிகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு என்று கணித்து முன்னரே எச்சரிக்கப்பட்டது. கோயம்பேடு சந்தையில் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. சென்னைக்கு வெளியே அமைக்கும் தற்காலிக சந்தைக்கு செல்ல வியாபாரிகள் விரும்பவில்லை.
கொரோனா பரவலை தடுக்க அரசு கடுமையான முயற்சிகளை கொண்டுள்ளது. கோயம்பேடு சந்தை வியாபாரிகளை அரசு பலமுறை அழைத்து பேசியது. நோய் பரவல் காரணமாக சந்தை மூடப்பட்டது. நோய் பரவலை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டது. அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது.
வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை படிப்படியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அநாவசியமாக வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதியை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.என்றார்.