தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் நேற்று புதிதாக 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 399 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 43 பேருக்கு இதுவரை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 18 மாவட்டங்களில் புதிதாக 600 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 28 குழந்தைகளும் உள்ளனர். மேலும் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 405 ஆண்கள், 195 பெண்கள் என 600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 1,605 பேர் இதுவரை குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். நேற்று 31 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று 28 குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 25 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 600 பேரில், சென்னையில் 1½ வயது பெண் குழந்தை உட்பட 23 குழந்தைகள் மற்றும் 376 பேரும், திருவள்ளூரில் 4 வயது குழந்தை உட்பட 2 குழந்தைகள் மற்றும் 73 பேரும், கடலூரில் 5 வயது ஆண் குழந்தை உட்பட 2 குழந்தைகள் மற்றும் 34 பேரும், செங்கல்பட்டில் 26 பேரும், விழுப்புரத்தில் 21 பேரும், திருவண்ணாமலையில் 11 பேரும், காஞ்சீபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா 8 பேரும், விருதுநகரில் 3 பேரும், நெல்லையில் 4 பேரும், கிருஷ்ணகிரி, மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திருச்சி, திருப்பத்தூர், தேனி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 78 வயது மற்றும் 58 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைப்போல் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 83 வயது முதியவரும் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.