நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு: போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்

ஒவ்வொருவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து மதுபாட்டில் வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-05-06 08:17 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதன்பின்னர் தமிழகத்தில் மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள சூழ்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.  இதேபோன்று, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மதுபான விற்பனை நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்தது.

தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளதை அடுத்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை திறக்கப்படும் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றறிக்கையில், 

* ஒவ்வொருவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து மதுபாட்டில் வழங்க வேண்டும்.

* 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

* கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும்

* கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு  வரிசைப்படுத்த வேண்டும்.

* அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க வேண்டும்.

பல்வேறு மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நாளில் கடும் கூட்டம் கூடியதால் தமிழக காவல்துறை இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்