வதந்திகளை நம்ப வேண்டாம்: மக்கள் தயக்கமின்றி கோழி முட்டை, இறைச்சியை சாப்பிடலாம் - தமிழக அரசு தகவல்
மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி கோழி முட்டை, இறைச்சி சாப்பிடலாம் என்றும், வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை,
கோழி இறைச்சி மற்றும் முட்டை உண்பதால் நமக்கு நன்மைகள்தான் ஏற்படும். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கும், கோழி இறைச்சி, முட்டை உண்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெறவும் கால்நடை, கோழி, முட்டை, மீன், இறைச்சி மற்றும் கால்நடை தீவனம், கால்நடை தீவனத்துக்கான உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளுக்கும் விலக்கு அளிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து கால்நடை, கோழி, முட்டை, மீன், இறைச்சி மற்றும் கால்நடை தீவனம், கால்நடை தீவனத்துக்கான உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளை அனுமதிக்குமாறு முதல்- அமைச்சர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஆகியோரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர், அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் கோழி இறைச்சி, முட்டை மற்றும் இதர கோழி உணவுப் பொருட்கள் சாப்பிடுவதால் கொரோனா தொற்று பரவக்கூடும் என்ற ஒரு தவறான செய்தி பொதுமக்களிடம் ஒரு பிரிவினரால் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கோழி, முட்டை, இறைச்சி சாப்பிட தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இது முற்றிலும் தவறாக வழி நடத்தும் செய்தியாகும்.
வதந்திகள் மூலம் நமது புரதத் தேவையை இழப்பது ஒருபுறம் இருந்தாலும், கோழி வளர்ப்பு தொழில் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட கோழி வளர்ப்போரும், விவசாயிகளும் நலிவடைந்து மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழலும் ஏற்படுகிறது. கொரோனா என்பது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு சுவாச குழாய் மூலம் தும்மல், சளி போன்றவற்றில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மற்றும் இவைகள் படர்ந்துள்ள பொருட்களை தொடுவதாலும் மட்டுமே பெரும்பாலும் பரவுகிறது.
முட்டை மற்றும் கோழி இறைச்சியானது மிகவும் மலிவான புரத உணவாகும். மேலும் அவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காரணியாகவும் அமைந்துள்ளது. தற்போதைய சூழல் மனிதனுக்கு அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் தேவைப்படும் காலகட்டமாகும்.
எனவே பொதுமக்கள் கோழி முட்டை, இறைச்சி உண்பது மூலம் கொரோனா தொற்று பரவியதாக இதுவரை எந்த நிகழ்வுகளும் நடக்கவில்லை. இது தொடர்பான தவறான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
எனவே மக்கள் தயக்கம் இல்லாமல் கோழி முட்டை, இறைச்சி ஆகியவற்றை உண்ணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.