எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்: மோட்டார் சைக்கிளில் தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவையில் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி மீது சரமாரி தாக்குதல் நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2020-03-10 20:45 GMT
கோவை,

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் முகமது இக்பால் (வயது 52). இவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும் இவர் கோவை ராம்நகரில் உள்ள பட்டேல் சாலையில் டயர் கடையும் நடத்தி வருகிறார்.

நேற்று மதியம் கடையில் இருந்த முகமது இக்பால், மாலை 3.45 மணிக்கு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் அங்கு வந்தது. அவர்கள் உருட்டுக்கட்டை, கம்பி உள்பட பல்வேறு ஆயுதங்களை வைத்து இருந்தனர்.

அந்த கும்பல் திடீரென முகமது இக்பாலை சரமாரியாக தாக்கியது. இதில் அவருடைய மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் முகமது இக்பாலை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், 7 பேர் கொண்ட கும்பல் முகமது இக்பாலை சரமாரியாக தாக்கியது தெரியவந்ததுள்ளது. அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக அவர்கள் முகமது இக்பாலை தாக்கினார்கள்? என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே முகமது இக்பால் சிகிச்சை பெற்று வரும் அரசு ஆஸ்பத்திரியில் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 2 பேரை அவர்கள் பிடித்து தாக்கினார்கள். பின்னர் அவர்கள் 2 பேரையும் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்