சசிகலா குறித்து விமர்சனம்: ‘தர்பார்’ பட கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு
‘தர்பார்’ படத்தில் சசிகலா குறித்த வசனத்தை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் ஜி.ஏ.ரோடு சுழல் மெத்தை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு காரில் செல்ல முடியாத அளவுக்கு ஜி.ஏ.ரோட்டில் பொங்கலுக்கு துணி மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.
இதனால் அமைச்சர் ஜெயக்குமார், அங்கிருந்த வாலிபர் ஒருவரது மோட்டார் சைக்கிளில் ஏறி, மற்ற கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
பொங்கல் பரிசு 4 நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். ஒவ்வொரு கடையிலும் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை 300 பேருக்கு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் காலையிலேயே வரவேண்டாம். இரவு 7 மணி வரை வழங்கப்படுவதால் பொறுமையாக வந்து வாங்கி செல்லுங்கள். அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
‘தர்பார்’ படத்தில் உள்ள கருத்துக்களை நானும் கேள்விப்பட்டேன். பணத்தால் எதையும் சாதிக்க முடியும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் பணம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. இது நல்ல கருத்துதான். இது சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என எண்ணுகிறேன்.
பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் வரக்கூடாது. சமுதாய சீர்திருத்த கருத்தாக இதை பார்க்கிறேன். இதற்குமேல் இதைப்பற்றி கூற விரும்பவில்லை. பொதுமக்கள் வரவேற்கக்கூடிய கருத்துதான்.
‘தர்பார்’ படத்தையும், ‘பிகில்’ படத்தையும் நாங்கள் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோம். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பு காட்சிகள் திரையிட அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர். எங்களுக்கு இரண்டும் ஒன்றுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.