பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது.
சென்னை,
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளன்று, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறாா். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் தமிழில் மொழிபெயா்த்து உரையாற்றுகிறாா்.
ஆளுநரின் உரை நிகழ்வுக்குப் பிறகு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப் பேரவை அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பா். இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடரின் நாட்கள் இறுதி செய்யப்படும். வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 10) வரை பேரவை கூட்டத் தொடா் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த கூட்டத் தொடரில் நீட் தோ்வு விவகாரம், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முக்கிய பிரச்னைகளை கிளப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், கூட்டத் தொடரின் அனைத்து நாட்களும் பரபரப்பாக இருக்கும் எனத்தெரிகிறது.