குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என, சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் பேசினார்.;
சென்னை,
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை ஐஸ்-அவுஸ் பள்ளி வாசல் அருகே சென்னை ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கே.அமானுல்லா கான் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், சேப்பாக்கம் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், காங்கிரஸ் பேச்சாளர் ஆனந்த் சீனிவாசன், வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா ரஹீம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நாடாளுமன்றத்தில் பேசினேன்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் பேசியதாவது:-
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு அனுமதி அளித்து இருப்பது அவர்கள் மீது உள்ள பாசத்தினால் அல்ல. அவர்களுக்கு அனுமதி மறுத்தால், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும்.
முதலில் முஸ்லிம்களை தனிமைப்படுத்த வேண்டும். அடுத்து கிறிஸ்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எண்ணம். பிரதமர் மோடி எங்கு சென்றாலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தமிழ் மீது பாசம் கொண்டவர் போல் உரையாற்றி வருகிறார். ஆனால், அதை பின்பற்ற மாட்டீர்கள் என்று நான் நாடாளுமன்றத்தில் பேசினேன்.
தனிநபர் தீர்மானம்
பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், என்.ஐ.ஏ. மூலம் முஸ்லிம் இளைஞர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு, இளைஞர்களை கைது செய்து பத்திரிகைகளில் பெரிய அளவில் செய்தி வெளியிடுகிறார்கள். சரியான வேலைவாய்ப்பு வழங்க முடியாமல், பொருளாதாரத்தை வளர்க்க முடியாமல் மதத்தின் பெயரால் இந்தியாவை துண்டாட நினைக்கிறார்கள்.
முஸ்லிம்கள் தி.மு.க.வின் தொப்புள் கொடி உறவுகள். நமது ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தால் தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றமாட்டார். நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தனிநபர் தீர்மானம் கொண்டு வருவார்.
இந்த சட்டத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம். மு.க.ஸ்டாலினை தாண்டித்தான் முஸ்லிம்களை தொட முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.