பாகிஸ்தானோடு தொடர்பு என்பதா? போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எதிர்ப்பு கோலம் போட்ட காயத்ரி பேட்டி

பாகிஸ்தானோடு தொடர்பு இருப்பதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியிருப்பது தவறானது என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட சமூக ஆர்வலர் காயத்ரி கூறினார்.

Update: 2020-01-03 22:30 GMT
சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை பெசன்ட்நகர் பகுதியில் ‘வேண்டாம் சி.ஏ.ஏ.’ என கோலம் போட்ட சமூக ஆர்வலரும், வக்கீலுமான காயத்ரி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் பேசும்போது, ‘சமூக ஆர்வலர் காயத்ரியின் முகநூல் பக்கத்தை பார்க்கும்போது அவருக்கு பாகிஸ்தானோடு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

இதுபற்றி காயத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோலம் போட்டதற்காக என் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், கோலம் போடும்போது 92 வயது முதியவர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதற்காக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

விரோதத்தால் வழக்கு

அதுபோன்று எந்த பிரச்சினையிலும் நாங்கள் ஈடுபடவில்லை. நாங்கள் பிரச்சினையில் ஈடுபடுவது போன்று ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோவில் நாங்கள் பிரச்சினையில் ஈடுபடுவது போன்று எந்த காட்சியும் இருக்காது. இருவர் தகராறில் ஈடுபடுவது போன்ற ஆடியோ மட்டும்தான் கேட்கும்.

92 வயது முதியவரிடம் நாங்கள் பிரச்சினையில் ஈடுபட்டதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்தபோதும், அவரிடம் இருந்து புகாரை பெற்று எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறாக நடந்துகொண்டதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எங்கள் மீது சில தனிப்பட்ட விரோதம் காரணமாகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறோம்.

சட்டப்பூர்வ நடவடிக்கை

எனக்கு பாகிஸ்தானோடு தொடர்பு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை போலீஸ் கமிஷனர் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் உள்பட 9 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வு குறித்த அறிக்கையைத்தான் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளேன். போலீஸ் கமிஷனரின் குற்றச்சாட்டு தவறானது.

என்னைப் பற்றி மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதுபோன்று கூறியிருக்கிறார். அவர் தனது கருத்தை திரும்பப்பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாதபட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

குடிமக்கள் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த மூத்த வக்கீல் வைகை, சுதா ராமலிங்கம், மோகன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்