தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ரூ.150 கோடி கட்டிடங்களை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட கல்வி சார் மற்றும் வணிகவரி அலுவலக கட்டிடங் களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.;
சென்னை,
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2017-ம் ஆண்டு 110 விதியின்கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட 7 புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் ஒன்றான, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி அரசு கலை கல்லூரியில் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டிடங்களை எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத் தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
புதிய கட்டிடங்கள்
சென்னை உள்பட 14 மாவட்டங்களில் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ரூ.82 கோடியே 94 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள பி.எம்.பிர்லா கோளரங்கத்தில் ரூ.10 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கருவியுடன் கூடிய கோளரங்கம் மற்றும் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கோளத்தில் அறிவியல் கருவி ஆகியவற்றின் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
கோள்களின் நகர்வுகள்
இதன்மூலம் மின்னணு கருவியுடன் கூடிய கோளரங்கத்தின் மூலமாக பகலிலேயே இரவு வானின் அமைப்பை துல்லியமாக காண முடிவதுடன், பல்வேறு நாடுகளின் இரவு வான் அமைப்பு, பருவ காலங்களில் ஏற்படும் வான் அமைப்பு, கோள்களின் நகர்வுகள் போன்றவற்றை காண்பதோடு, விண்வெளிக்கே பயணம் செய்து கோள்கள், விண்மீன்கள் போன்றவற்றை அருகே சென்று காண்பது போன்ற உணர்வையும் பார்வையாளர்கள் பெற இயலும்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன், தலைமை செயலாளர் க.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வணிகவரி கட்டிடங்கள்
அதனைத்தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் ரூ.42 கோடியே 90 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், 1 வணிகவரி அலுவலக கட்டிடம் மற்றும் 1 சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ரூ.150 கோடியே 24 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கல்விசார் மற்றும் வணிகவரி கட்டிடங்கள் நேற்று திறக்கப்பட்டு உள்ளன.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.