‘மஹா’ புயல் எதிரொலி: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 95 குமரி மீனவர்கள் மாயம்

‘மஹா’ புயலில் சிக்கி 95 குமரி மீனவர்கள் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-10-31 21:18 GMT
கன்னியாகுமரி,

அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மஹா’ புயலாக மாறி உள்ளதால் குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயத்தில் புயல் எச்சரிக்கைக்கு முன்பாக தேங்காப்பட்டணம் மற்றும் கொச்சி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 8 விசைப்படகுகளில் 102 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். தற்போது, அரபிக்கடலில் ‘மஹா‘ புயல் உருவாகிய நிலையில் அவர்களை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்த மீனவர்கள் வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, மிடாலம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களில் 95 பேர் குமரி மீனவர்கள், 7 பேர் கேரள மீனவர்கள் ஆவர்.

கோரிக்கை

95 மீனவர்களும் மாயமானதாக வெளியான தகவல் குமரி மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களுடைய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்