மாமல்லபுரம் அருகே கார் கவிழ்ந்து கணவன், மனைவி உள்பட 3 பேர் பலி
மாமல்லபுரம் அருகே கார் கவிழ்ந்து கணவன், மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.;
மாமல்லபுரம்,
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் காமேஷ் (வயது 22). நேற்று முன்தினம் காமேஷ் தன்னுடைய மனைவி சுவேதா (20). உறவினர் இந்துமதி, அவரது 10 மாத குழந்தை பரத் ஆகியோர் வெண்புருஷத்தில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள காரில் சென்றனர். கார் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை என்ற இடத்தில் செல்லும்போது திடீரென நிலைதடுமாறி சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் கார் டிரைவர் உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
3 பேர் சாவு
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு காமேஷ், சுவேதா இருவரும் பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 10 மாத ஆண் குழந்தை பரத் நேற்று மாலை உயிரிழந்தான்.
இறந்த கணவன்-மனைவி மற்றும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.